அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்களுடன் இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற்று, அதில் இ.பி.எஸ். மட்டுமே மனுத் தாக்கல் செய்ய, எதிர் தரப்பான ஓ.பி.எஸ். அணி அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஓ.பி.எஸ். தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்தார். தீர்ப்பு வந்த சில நிமிடங்களிலேயே பதவியேற்று ஓ.பி.எஸ்.சின் அடுத்த நகர்வுக்கு நெருக்கடி ஏற்படுத்தி இ.பி.எஸ். அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேசமயம், ஓ.பி.எஸ். தரப்பு தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.
பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இ.பி.எஸ். அன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர்” என்று தெரிவித்தார். நீதிமன்றமும், தொண்டர்களும் தந்த அங்கீகாரத்தை அங்கீகரிக்கக் கோரி இ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய, நீதிமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அணை போட மேல் மூறையீடு செய்த ஓ.பி.எஸ்., தொண்டர்களின் அங்கீகாரத்தையும் தடை செய்யச் சொல்லி ஆணையிட தேர்தல் ஆணையத்திற்கு மனு செய்தார். அந்த மனுவில், ‘நீதிமன்றங்களில் அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இ.பி.எஸ்.சின் முறையீட்டை ஏற்று பொதுச் செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ். தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு வருகின்ற 10 ஆம் தேதி நீதிபதி பிரதீப் எம். சிங் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.