தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று அவர் சார்ந்த கொங்கு மண்டலத்தில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம் எடப்பாடி பழனிசாமியின் சாதனையாக அ.தி.மு.க.-வினர் மத்தியில் பேசப்படுகிறது.
அந்தத் திட்டம் அவினாசி அத்திக்கடவு திட்டம். இது கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பல நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சென்ற 2018 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக இத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதைப் பார்வையிடுவதற்காக 25.06.2020 வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நசியனூர் பகுதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். மாலை ஆறு மணிக்கு நடந்த இந்நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் மாவட்ட எம்.எல்.ஏ.-க்கள் அதிகாரிகள் கலந்து கலந்துகொண்டனர்.
இந்த அவிநாசி அத்திக்கடவு திட்டம் ஏறக்குறைய 20 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்புப் பகுதிகளில் நீர் ஆதாரமாகவும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டப் பகுதிகளில் குடிநீர்த் தேவையாகவும் உள்ளது. இத்திட்டம் வருகிற 2021 டிசம்பருக்குள் முடிவடைந்து விடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். கொங்கு மண்டலத்தில் இருந்து ஒருவர் முதல்வராக பொறுப்பேற்று அரங்கேறிய சாதனையாக இந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் பேசப்படுகிறது.