கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாமக. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்கிறது என அதிமுகவில் சிலர் சொல்லி வருகின்றனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்துகொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு விவகாரம் மற்றும் பாஜகவுடன் கூடுதல் இடங்கள் உள்ளிட்டவை குறித்து பாமக வலியுறுத்தி வருகிறது. இதனால் கூட்டணி இறுதி வடிவம் பெறவில்லை. இந்தநிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ‘சிஏஏ போராட்டம், கரோனா வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முதலமைச்சரின் அறிவிப்பு நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கும்’ என டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றவர்கள் மீதும், கரோனா பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.
கடையநல்லூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இன்று பேசிய முதலமைச்சர், இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். இது மிகவும் சரியான நடவடிக்கை ஆகும். குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் அவை உள்நோக்கங்கள் கொண்ட போராட்டங்கள் அல்ல. தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடுமோ? அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாகிவிடுவோமோ? என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல வடிவிலான இயக்கங்கள் நடத்தப்பட்டன. கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறது.
அதேபோல், கரோனா காலத்தில் ஊரடங்கு ஆணையை மீறி நடமாடியவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெற வேண்டியவையே. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீதும் இந்த மூன்று வகையான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் அவர்களின் எதிர்காலத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் இந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இப்போது இந்த வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது இந்த பாதிப்புகளை போக்கி உள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை'' எனக் கூறியுள்ளார்.