தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
நகராட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அது சட்டசபையிலும் இன்று எதிரொலித்தது. சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என முழக்கமிட்ட அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள், பின்னர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை காத்திருந்து திமுக அரசு சொத்துவரியை உயர்த்தியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்த சொத்துவரி உயர்வு வாக்களித்த மக்களுக்கான பரிசு என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஆதாரம் தேவை என்பதால் வரி உயர்வு தவிர்க்க முடியாதது என முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.