தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழநி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது; "தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி; அ.தி.மு.க. கூட்டணி வலிமையான வெற்றிக் கூட்டணி. வரும் சட்டமன்றத் தேர்தலோடு தி.மு.க.வின் சகாப்தம் முடிவுக்கு வரும். 52.31 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 49% உயர்ந்துள்ளது. நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது; பல்வேறு துறைகளில் தேசிய விருது பெற்றுள்ளது தமிழ்நாடு. ரூபாய் 12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். கூட்டுறவுக் கடன் சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். தைப்பூச திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு அ.தி.மு.க. அரசு. நிலமும், வீடும் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரும். இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்க இல்லந்தோறும் வாஷிங்மெஷின் வழங்கப்படும். பழநியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடவுளே இல்லை எனக்கூறி வந்த தி.மு.க.வினர் தற்போது கையில் வேல் பிடித்துள்ளனர். பழநியில் பச்சையாறு அணைத் திட்டம் கொண்டு வரப்படும்" எனத் தெரிவித்தார்.