
கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட ரகு என்பவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி மாந்திரீக தொழில் செய்து வருகிறார். மேலும், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கும் ரகு அதில், தான் செய்யும் மாந்திரீக வேலைகளை கூறி வந்துள்ளார். இதனையும் நம்பி பலர் ரகுவை தொடர்பு கொண்டு தங்களுக்கும் மாந்திரீகம் முறைப்படி சில வேலைகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அவர்களிடம் வேலைக்கு ஏற்றார்போல் ஆயிரம் முதல் இலட்சம் வரை பணம் பெற்று ரகு மோசடி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த மாந்திரீக யூடியூப் வீடியோக்களை பார்த்து உண்மையென நம்பிய பெரம்பலூரைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா என்பவர் ரகுவை தொடர்பு கொண்டு தான் சொல்லும் நபரை மாந்திரீக முறைப்படி கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ரகுவும் சரி என்று கூற, தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த முரசொலி மாறன் என்பவரைக் மாந்திரீக முறைப்படி கொலை செய்ய வேண்டும் என்று ரமேஷ் கிருஷ்ணா முதல் தவணையாக ரூ.10 லட்சத்தைக் கொடுத்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ரகு, ரமேஷ் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு அடிக்கடி பணம் கேட்டுள்ளார். அவரும் தொடர்ந்து பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியாக இது வரை ரமேஷ் கிருஷ்ணா ரூ.21 லட்சத்திற்கும் மேலாக ரகுவிற்கு பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தனது யூடியூப் சேனலில் பேசிய ரகு மாந்திரீக முறைப்படி முரசொலி மாறனை கொலை செய்ய ராமகிருஷ்ணா திட்டம் தீட்டியுள்ளது குறித்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த முரசொலி மாறன், ராமகிருஷ்ணா என்பவர் தன்னை கொலை செய்ய மாந்திரீக முறைப்படி திட்டம் தீட்டியுள்ளார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், போலி சாமியார் ரகு மற்றும் ராமகிருஷ்ணா இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் மேற்கண்ட தகவல் அனைத்தும் உண்மை எனத் தெரியவந்ததையடுத்து இருவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.