கடலூர் மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளர்களாகப் போட்டியிடும் திட்டக்குடி வெ.கணேசன், நெய்வேலி சபா.ராஜேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் விருத்தாசலம் - காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், பண்ருட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் வேல்முருகன் ஆகியோரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரச்சாரத்தில் பேசிய அவர், “நடுநாடு என்றழைக்கப்படும் கடலூர் மாவட்டத்தில் வேங்கை மரத்திற்கு திட்டக்குடி, சிற்பங்களுக்கு விருத்தாசலம், நிலக்கரிச் சுரங்க நகரமாக நெய்வேலி, நினைத்தாலே இனிக்கும் பலாப்பழத்திற்கு பண்ருட்டி. இப்படிப்பட்ட பெருமைக்குரிய ஊர்களின் வேட்பாளர்கள் தான் நமது வேட்பாளர்கள். இவர்கள் மட்டுமல்ல நானும் வேட்பாளர் தான். நமது கட்சி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஓட்டு போட்டால் தான் நான் முதலமைச்சராக முடியும். நமது தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, இதுதான் திமுகவின் அடிப்படை கொள்கை.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கக்கூடிய 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். நீர்நிலைகளைப் பாதுகாக்க 75 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, மதவெறியைத் தூண்டி, சமஸ்கிருதத்தைக் கொண்டுவந்து, நீட்டை கொண்டு வந்து மாணவர்களின் கல்வியைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசுக்கு நான் சொல்ல விரும்புவது ‘இது திராவிட மண், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் பிறந்த மண்’ எனவே இந்த மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கு பலிக்காது.
எடப்பாடி பழனிசாமி அரசு, தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி பணியிடங்களில் பிற மாநிலத்தவர் சேரலாம் என்ற சட்டத்தைச் செய்திருக்கக் கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி. ஜெயலலிதா இருந்த போது நடத்திய முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3 கோடி 62 லட்சம் முதலீடு கொண்டு வந்துள்ளோம் எனக் கூறினார்கள். ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சம் கோடி 68 லட்சம் முதலீடு கொண்டு வந்துள்ளோம் என்று கூறினார்கள். கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி கொண்டுவந்துள்ளதாகக் கூறினார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது?
நமது கழக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் திட்டக்குடி, பெண்ணாடம் பேரூராட்சிகள் நகராட்சியாக மாற்றப்படும். விருத்தாசலத்தில் பீங்கான் தொழிற்சாலை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். விருத்தாசலத்தில் அரசு மகளிர் கல்லூரி கொண்டு வரப்படும். பண்ருட்டி தொகுதியில் மரவள்ளிக் கிழங்கு தொழிற்சாலை, குளிர்பதனக் கிடங்கு, முந்திரி பதப்படுத்தும் தொழில் பயிற்சி மையம், பலாப்பழம் தொழிற்சாலை உருவாக்கப்படும். என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளைக் கடுமையாக எதிர்ப்பதுடன் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வோம். என்.எல்.சியில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குப்படும். நெய்வேலியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். என்.எல்.சி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை கொண்டு பாசன வசதிகளைப் பெருக்கி அருகிலுள்ள கிராமங்களுக்குத் திருப்பி விடப்படும். என்.எல்.சி சுரங்கங்களுக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க ஆய்வு செய்யப் பரிந்துரைக் குழு அமைக்கப்படும்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.