அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையில் நேற்று (06.08.2023) காலை சென்னை வானகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணை பொதுச் செயலாளர்கள் ஜி. செந்தமிழன், ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, கட்சியின் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனும், கட்சியின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலும், கட்சியின் துணைத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகனும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி சரிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமியின் தரப்பினர் தி.மு.க.வின் தயவில் இருக்கின்றனர். தவறு செய்த எடப்பாடியும் தவறு செய்து கொண்டிருக்கும் தி.மு.கவும் ஒரே அணியில் இருக்கின்றனர். தீய சக்திகளை வெல்வதற்கு வியூகத்தை அமைத்து வருகிறேன். துரோகத்தை ஒருபோதும் வெல்லவிடப் போவதில்லை. இன்றைக்கு தி.மு.க.விற்கு சாதகமாக சுயநலத்தால் தங்கள் மீது வழக்குகள் வந்துவிடக் கூடாது என்று நினைக்கின்றனர். தி.மு.க.வுடன் பேரம் பேசி ஜெயலலிதாவின் தொண்டர்களை பிரித்தாளுகின்ற அந்த தீயவர்கள் யாரென்று எனக்கு தெரியும். இன்றைக்கு அல்ல வருங்காலத்தில் அவர்களை அரசியல் ரீதியாக வீழ்த்தாமல் நான் ஓயமாட்டேன்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தொடர் பிரச்சாரங்கள் நடத்துவது, பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.