தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் கைப்பற்றியது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெரும் என்ற வரலாற்றை திமுக மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருந்தும், அதிகார பலம் மற்றும் பண பலம் இரண்டையும் பயன்படுத்தியும் எப்படி தோல்வி அடைந்தோம் என்று அதிமுக தலைமை மிகுந்த வேதனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மீது அதிமுக தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் கொடுத்த பணத்தை சரியாக செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அதிமுகவில் எழுந்தது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக நிர்வாகிகள் கொடுத்த பணத்தை சரியாக செலவு செய்யவில்லை என்று அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் என்பதால் ஒவ்வொரு கிராமப்பகுதியில் இருக்கும் கிளைச் செயலாளர்களிடம் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் வாக்காளர்களிடம் முழுமையாக கொண்டுபோய் சேர்க்கவில்லை என்று அந்த மாவட்ட பொறுப்பாளர்கள் எடப்பாடியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களைகாப்பாற்றிக் கொள்ள கிடைமட்ட பொறுப்பாளர்கள் மீது பழிபோட்டு வருவதால், உண்மை நிலவரத்தை கண்டறிய எடப்பாடி களத்தில் இறங்கியிருப்பதாக கூறுகின்றனர்.