எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் நேற்று (20.04.2023) அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பல நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை, ''இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடியவர்கள் எல்லாம் இனிமேல் இந்த இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம். இரட்டை இலை சின்னத்தையும் உரிமை கோருவது இனிமேல் நடக்காது. காரணம் கட்சியும் சின்னமும் எடப்பாடி பழனிசாமியிடம் இந்திய தேர்தல் ஆணையத்தால் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் அவர்களது வழியைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்-ஐ சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் அவரிடம், 'அதிமுக சின்னத்தை, கொடியை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என சொல்லியுள்ளார்களே' என்று எழுப்பிய கேள்விக்கு, ''எந்த கோர்ட்டு சொல்லிருக்காங்க'' என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். செய்தியாளர்கள் அதற்கு நீதிமன்றம் அல்ல எடப்பாடி தரப்பினர் சொல்லியுள்ளார்கள் எனச் சொல்ல, பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றார் ஓபிஎஸ்.