திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 6- வது முறையாக போட்டியிடுகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தனது தொகுதிக்குட்பட்ட மஞ்சள் பரப்பு, புல்லாவெளி,பெரும்பாறை, கட்டைக்காடு, குத்துகாடு, புதூர், வெள்ளரிக்கரை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்குச் சென்ற ஐ.பெரியசாமி பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.
அப்போது மக்களிடையே பேசிய ஐ.பெரியசாமி, "தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியது போல் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பெண்கள் உரிமைத் தொகை ரூபாய் 1,000, கரோனா நிவாரணம் ரூபாய் 4,000, சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் என அனைத்து நலத்திட்டங்களும் உங்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். மேலும், தமிழகத்தில் செல்லும் அனைத்து நகர பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தார். அதேபோல நகர்புற பேருந்து வசதி இல்லாததால் மலை கிராமங்களுக்கு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மலைக் கிராம வழித்தடங்களில் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பெண்களும் கட்டணம் இல்லாத பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் விரிவாக்கப்படும்" என்று பேசினார்.
வாக்குச் சேகரிப்பின் போது ஆத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமன், ஆத்தூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஊராட்சித் தலைவர் லதா செல்வகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.