சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் கலைஞர்களுடன் இணைந்து திமுக எம்.பி கனிமொழி பொங்கல் திருநாளை கொண்டாடினார்.
இதன் பின்னர் எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த தமிழ்ப் புத்தாண்டிலிருந்து தமிழ்நாடு பல்வேறு சிறப்புகளைப் பெற்று மக்கள் அத்தனை பேருக்கும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும். தமிழகம் தமிழ்நாடு என இரண்டையும் சொல்லிக்கொண்டு இருந்தவர்கள்தான் நாம். ஒருவர் ஒன்றைச் சொல்லக்கூடாது என சொன்னால் நம் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாடு என்ற பெயர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பேரறிஞர் அண்ணா வைத்த பெயர். இதை சொல்லக்கூடாது என்னும் உரிமை யாருக்கும் கிடையாது. என்னுடைய பொங்கல் வாழ்த்து அட்டைகளில் தமிழ்நாடு எனக் குறிப்பிட்டு கோலம் போட்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பினேன். அதை சில பேர் பார்த்துவிட்டு இணையத்தில் பதிவுகளைப் போட்டிருந்தார்கள். இது தமிழர்களின் உணர்வை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது.
நீங்கள் தமிழர்களைச் சீண்டிப் பார்த்தால் அதன் உள்ளே இருக்கும் தமிழ் உணர்வு, சுயமரியாதை என்பதை எதுவும் தணித்துவிட முடியாது. எப்பொழுதும் அமைதியாக பேசும் முதல்வர் மிகக் கறாராகப் பதில் சொல்லக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளார்கள்.
அவர்களுக்குத் தமிழ்நாடு என்ற பெயர் உறுத்தலாகவே உள்ளது. அவர்களுக்கு இந்தியா என்பதை ஒரே அடையாளமாக இருக்கக்கூடியதாகவும்., மீதமுள்ளவை அனைத்தும் கரைந்து போகக்கூடியதாகவும் நினைக்கிறார்கள்” எனக் கூறினார்.