
கடந்த 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முன்னால் எம்.எல்.ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் சமாஜ்வாதி முன்னாள் எம்.பி. அட்டிக் அகமது மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. உத்திரப்பிரதேசத்தில் தாதாவாக இருந்து அரசியலுக்கு வந்தவர் அட்டிக் அகமது.
ராஜூபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ்பால் மற்றும் அவருக்கு பாதுகாப்பு கொடுத்த 2 பேர் கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உமேஷ் பாலின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அட்டிக் அகமது, அவரது மகன் ஆசாத் மற்றும் அட்டிக் அகமதுவின் சகோதரர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அட்டிக் அகமதுவும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசாத் மற்றும் தலைமறைவாக இருந்தார்.
ஜான்சி பகுதியில் பதுங்கியிருந்த ஆசாத்க்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆசாத் கொல்லப்பட்டதாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவித்தனர். காவல்துறையால் கைது செய்யப்பட்ட அட்டிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் என இருவரையும் ஏப்ரல் 26 வரை நீதிமன்றக் காவலில் வைக்க பிரயாக்ராஜ் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உத்தரவிட்டிருந்தது.
நேற்றிரவு அட்டிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்ட போது இருவரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர்கள் போல் நின்றிருந்த இருவர் அட்டிக் மற்றும் அஷ்ரஃப் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆத்யநாத், கொலை குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு எந்த வகையான பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாநிலத்தில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் வதந்திகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என்றும் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.