திருக்குறள் தொடர்பான விவாதங்கள் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது, அவரின் சிலைக்கு மை அடிப்பது, சிலையை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளூவர் சிலை மர்மநபர்களால் அவமதிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அந்த சிலைக்கு காவி துண்டு, ருத்ராட்சம் ஆகியவற்றை அணிவித்து தீபாராதனைக் காட்டினார். இதற்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இவ்வாறு தொடர்ந்து திருவள்ளுவர் பேசுபொருளாக உள்ள நிலையில் தற்போது சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணித்து கையில் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.