“தம்பிக்கு எந்த ஊரு? நோட்டீஸ புடிங்க... மறக்காம கை சின்னத்துல ஓட்டு போட்ருங்க..” என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளால் பரபரக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கை சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஈரோடு சத்திரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே தனது பரப்புரையைத் தொடங்கினார். பேருந்து நிலையம், கருங்கல்பாளையம், பூங்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி உள்ளிட்ட மதிமுகவினர் பலரும் பெருந்திரளாக துரை வைகோவுடன் நடந்தே சென்றனர்.
துரை வைகோவை காண பொதுமக்களும் ஆர்வம் காட்டினர். டீக்கடை, ஹோட்டல், மக்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு நடந்து சென்ற துரை வைகோ, அவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்படி டீக்கடை ஒன்றில் நுழைந்த துரை வைகோ, அங்கிருந்த ஊழியர்களிடம் சிறிது நேரம் பேசினார். “வியபாரம் எல்லாம் எப்படிப் போகுது? தேர்தல் வந்தாலே டீ நல்லா வியாபாரம் ஆகும்ல..” எனச் சிரித்துக் கொண்டே கேட்டார். பின்னர், அந்த டீக்கடை ஊழியரிடம், “உங்க சொந்த ஊர் எது?” எனக் கேட்டார். அதற்கு அந்த ஊழியர், “எனக்கு பீகார்” எனக் கூறினார். “உங்களுக்கு ஓட்டு இங்கே இருக்குதா?” என துரை வைகோ கேட்க, அவரும் சிரித்துக்கொண்டே “எனக்கு இங்கே ஓட்டு இருக்குது சார்” எனக் கூறினார். உடனடியாக, “இந்தாங்க நோட்டீச புடிங்க... உங்க ஓட்ட கை சின்னத்துக்கு போட்ருங்க..” எனக் கூறினார். அதற்கு அந்த பீகார் ஊழியர் தலையசைக்கவே.. அங்கிருந்து கிளம்பினார் துரை வைகோ. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.