“இரட்டை இலை சின்னம் முடங்கத்தான் செய்யும்” என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா ஜனவரி 4 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்ததன் காரணமாக அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, ஜனவரி 31 இல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 இல் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் அமமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்தினை நீக்கிவிட்டு அவர் தான் பொதுச்செயலாளர் என அறிவித்துக்கொண்டார். உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு உள்ளது. எனக்கு தெரிந்த சட்ட அறிவுப்படி, தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகத்தான் நமக்குத் தெரிகிறது.
இரண்டு பேருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தேர்தல் ஆணையத்தினை அணுகினால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுதான் எதார்த்தம். அந்த வகையில் பழனிசாமி பல கோடிகள் செலவு செய்து பொதுக்குழு நடத்தி பொதுச்செயலாளர் ஆகி இப்பொழுது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காகக் காத்திருப்பது என்ன ஆகும் என்று தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை முடங்கத்தான் செய்யும்” எனக் கூறியுள்ளார்.