பச்சைத் தமிழர் காமராசரின் 116ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2018) சென்னை பெரியார் மேம்பாலம் (சிம்சன்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கழகத்தோழர் & தோழியர்கள் புடைசூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில் அமர்த்தக் காரணமானவர் தந்தை பெரியார்! காமராசர் தேசியத்தில் பூத்த மலர்; திராவிடத்தில் காய்த்த கனி! பெரியார் என்ற ஜீவ நதியின் நீர்ப் பாசனத்தால் விளைந்த விளைச்சல் என இன்று (15.7.2018) அவரது 116ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் புகழ்ந்துரைத்துள்ளார். அவர் அறிக்கை வருமாறு:
பச்சைத்தமிழர் என்று அறிவு ஆசான் தந்தை பெரியாரால் அழைக்கப்பட்டு, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து, அவர் மூடிய 6,000 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்த காமராசரை - அவர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றால்தான் இத்தகைய திருப்பத்தை உருவாக்க முடியும் என்ற தொலை நோக்குப் பார்வையுடன், டாக்டர் ப. வரதராஜலு நாயுடு அவர்களின் இல்லத்தில் கூடி, கலந்துபேசி, ஒப்புக் கொள்ளத் தயங்கிய காமராசரை வற்புறுத்தி முதல் அமைச்சர் பொறுப்பில் அமர்த்தக் காரணமானவர் தந்தை பெரியார்!
இது, 1953-1954இல் நடைபெற்ற நிகழ்வு. தமிழ்நாட்டு அரசியலின் மிகப் பெரிய சரித்திரத் திருப்பம்!
அதன்பிறகு காமராசர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தபோது அடுக்கடுக்காக இடையூறுகள் தோன்றின. இன எதிரிகள் ஆச்சாரியார் தொடங்கி, அவரிடம் பதவி எதிர்பார்த்து ஏமாந்தவர்களின் எதிர்ப்பு உட்பட அத்தனையையும் தூளாக்கிய வாளும் கேடயமுமாக திராவிடர் இயக்கம் - குறிப்பாக திராவிடர் கழகம் இயங்கியது.
காமராசர் ஆட்சிக்காலம் பொற்காலம்
காமராசர் ஆட்சியின் சாதனைகளை நாடெலாம், வீடெலாம் பரப்பி, பலமான பார்ப்பன பத்திரிக்கை உலகின் எதிர்ப்பையும் முறியடித்தது திராவிடர் கழகமும், அதன் ஒப்பற்ற ஆசான் தலைவர் தந்தை பெரியாரும். மட்டுமா?
டில்லியில், காமராசர் அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க, கே. பிளான் (காமராசர் திட்டம்) என்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்து டில்லிக்குப் புறப்பட்டபோது, அது சரியான முடிவல்ல; அது தற்கொலைக் கொப்பானது என்று ஒரு தந்தை நிலையில் நின்று அறிவுரை வழங்கியவர் தந்தை பெரியார். (பிறகு அய்யா சொன்னதை நான் ஏற்காதது தவறுதான் என்று மனம் வருந்தி அருகில் இருந்த அவரது நெருங்கிய நண்பர்களிடம் கூறியதைச் சிலரே அறிவர்).
காமராசர் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று தந்தை பெரியார் கூறியதையெல்லாம் நடுத்தர வயதுக்கு மேற்பட்டவர்கள் அறிவர்.
அதற்கு முன்னே அதாவது சுமார் 72 ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகம், காமராசருக்கு காந்தியாரால் - பார்ப்பன நயவஞ்சகத்தால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கிடவும், அவரிடம் ஆச்சாரியார் தலைமையில் ஒரு கூட்டம் தேசியம் பேசிக் கொண்டே மோதி, அதில் காந்தியார் நடுநிலை தவறி, காமராசர் அதிகார பூர்வ தலைவர் என்ற நிலையையும் மறந்து, ஒரு விஷமக் கும்பல் (க்ளிக் -clique) என்று கூறி மனம் புண்பட வைத்தது தேசியத்திற்குள் வெடித்த ஆரிய - திராவிடப் போரின் வெளிப்பாடு என்பதை அன்று (6.1.1946) திராவிட நாடு இதழில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அறிஞர் அண்ணா தனது தேன் தமிழில் கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது என்ற தலைப்பிட்டு ஒரு விரிவான அரசியல் - திராவிட - ஆரிய திரைமறைவுப் போரினை மிக அருமையாக விளக்கினார்.
காமராசர் - ஆச்சாரியார் அணிகள் தங்களது நிலைப்பாட்டினை விளக்கிட, நிலை நிறுத்த சேலம் மாவட்ட திருச்செங்கோட்டிலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திலும் கூடிய பிறகு, ஆகஸ்ட் போராட்டத்தில் (கல்கத்தா) எதிராகப் பேசிய ஆச்சாரியார்மீது கட்டுப்பாட்டை ஒட்டிய விமர்சனம் செய்த காமராசரை பலமிழக்கச் செய்ததை விளக்கினார்.
ஆரிய - திராவிட இனப் போராட்டம்
அது மட்டுமல்ல, தொடர்ச்சியாக 17.2.1946இல் காமராசர் சிந்தும் கண்ணீர் என்ற தலைப்பில் ஒரு அற்புதமான - அரசியல் போராட்டங்கள் ஆரிய - திராவிட இனப் போராட்டம் - காமராசர் - ஆச்சாரியார் அரசியல் மோதல் என்பதை விளக்கியதோடு, காமராஜரின் கண்ணீரைத் துடைக்க காத்திருக்கிறது கடமையாற்றும் கருஞ்சட்டைப்படை என்று எழுதினார்!
தேசியத்தில் பூத்த மலர் காமராசர்; ஆனால் திராவிடத்தால் கனிந்த கனி என்பதைப் புல்லர்களுக்குக்கூட புரிய வைக்கும் பழைய வரலாற்றிலிருந்து, படித்துக் கொள்ள வேண்டிய திராவிடப் பாசறை தீந்தமிழில் தீட்டிய அரசியல் அழகோவியம்!
அதில் ஒரு பகுதி இதோ - 72 ஆண்டுகளுக்கு முந்தையதானாலும் என்றும் வரலாற்றில் நிலைத்த முன்னோட்டம் ஆனால், காமராஜர், காங்கிரசைவிட்டு விலகுவார் என்று நாம் நம்புகிறோமா? இல்லை! நம்பவுமில்லை! அவருக்கு அந்த யோசனையைக் கூறவுமில்லை, திராவிடர் கழகம், நெருக்கடியான நேரத்தில் கண்ணீர் வடித்துக்கொண்டு, வேறு வழி இல்லையே என்று கூறும், பக்தர்களை அழைக்கவில்லை, தேவையில்லாததால்! காமராஜர்கள், அங்கேயே இருக்கட்டும்.
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக நம்பட்டும், அவர்கள் படும் அல்லலை, அவர்கள் அங்கு ஆரியத்தால் அடக்கப்படுவதை, அவர்களின் ஆண்மை மங்குவதை, திராவிடர் கழகம் கவனித்துவருகிறது. ஆரியத்துடன் அக்கழகம் நடத்தும் போரிலே அவர்கள் சார்பாகவும், நிச்சயமாகத் திராவிடர் கழகம் பேசும்! காமராஜரின் கண்ணீரை திராவிடர் கழகம், கருப்புச் சட்டைப்படை, துடைக்கும். அவர் அடைந்த கதியால், தமிழனுக்கு ஏற்பட்ட தாழ்நிலையை, நிச்சயமாகத் திராவிடர் கழகம் போக்கும்.
வீழ்ச்சியுற்ற இனத்திலே, இதுபோல விழியில் நீருடன் வீரர்கள் இருப்பதுண்டு. ஆனால் எழுச்சி பெற்றதும், அந்த இனத்திலே தோன்றும் வீரர்கள் முன்னவர் சிந்திய கண்ணீரைக் கவனத்திலிருத்தி மாற்றான் மண்டியிடும் அளவு வெற்றிபெற்று அந்த வெற்றிநாளன்று, வீழ்ந்துகிடக்கும் மாற்றானைநோக்கி, மமதை கொண்டவனே! உன்மயக்க மொழியிலே சிக்கிய மறத்தமிழனைச் சீரழித்தாயே அன்று! உன்னால் அடைந்த வேதனையைத் தாங்கமாட்டாமல் விழியில் நீர்பெருக்கினானே! அந்தக் கண்ணீர், இந்தக்கூர்வாளாயிற்று என்று கூறுவர். காமராஜரே! கவலையைக் கொஞ்சம் துடைத்துக்கொண்டு பாரும், ஊரெங்கும் தோன்றியுள்ள கருப்புச்சட்டைப் படையை! தமிழனின் கண்ணீரைத் துடைக்கும் பணியே, அந்தக் கருப்புச் சட்டைப்படைக்கு! கண்ணீர் துடைக்கப்படும்.
அதற்குப்பின் அரை நூற்றாண்டு கால அரசியல் திரைக்குப்பின் நடைபெற்ற தேவாசுரப் போர் - ஆரிய - திராவிடப் போரில் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் துணை நின்ற நிகழ்வுகள் நீண்ட வரலாறு.
இதோ இரண்டொரு துளிகள்:
(1) கறுப்புக் காக்கையைக் கல்லால் அடியுங்கள் என்ற ஆச்சாரியாரின் நிதானம் இழந்த பேச்சுக்கு நாடு தழுவிய கழகக் கண்டன கூட்டங்கள் நடத்தியது திராவிடர் கழகம்.
2) டில்லியில் காமராசர் தூங்கிக் கொண்டிருந்த வீட்டில் பட்டப் பகலில் தீ வைத்து, கொலை செய்ய முயற்சித்த ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தின் பசுவதை தடுப்பு போர்வையில் - சமதர்மத்தைக் காத்த காமராசரை ஒழித்துக் கட்ட முயன்றபோது அதை அம்பலப்படுத்தியது திராவிடர் இயக்க வீரர்களே!
காமராசர் கொலை முயற்சி சரித்திரம் நூலை வெளியிட்டு, மதவெறியர்களின் முகமூடியைக் கிழித்திட்டது திராவிடர் கழகமே!
இப்போது புரிகிறதா காமராசர் தேசியத்தில் பூத்து, திராவிடத்தால் காய்த்து, கனிந்த கனி என்பது! அவரைப் பயன்படுத்தும் காவிகளிடம் எச்சரிக்கை தேவை! கலைஞர் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய சட்டம்தான் இன்று பள்ளிகள் காமராசரின் பிறந்த நாளை கல்வி விழாவாகக் கொண்டாடுவதற்கு அடிப்படை. இப்போது புரிகிறதா காமராசர் திராவிடத்தில் காய்த்த கனி, பெரியார் என்ற ஜீவ நதியின், நீர்ப் பாசனத்தால் கிடைத்த விளைச்சல் என்பது! வாழ்க காமராசர்! வருக அவர் விரும்பிய சமதர்ம, மதச்சார்பற்ற நாடு! ’’