தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ''அவரை திரும்பப்பெற வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் பல போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறோம். கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட கிரண்பேடிக்கு கிடைத்த தண்டனை. புதுச்சேரிக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. கிரண்பேடி அம்மையாரை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இந்நிலையில் கிரண்பேடி நீக்கப்பட்டது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் சட்டம், ஜனநாயகத்தைக் கேலிப் பொருளாக்கியவர் கிரண்பேடி. அதிகார மோகம் கொண்ட ஒரு துணைநிலை ஆளுநரை இவ்வளவு நாட்கள் பதவியில் வைத்திருந்ததே தவறு. அவரை மாற்றியது என்பது காலதாமதமான நடவடிக்கை. பாஜகவின் தரம்தாழ்த்த அரசியல், மாநிலத்தைப் பாழ்படுத்திய மோசமான அரசியலை புதுச்சேரி மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.