
தேசியகீதத்தில் திராவிடம் என்று வருகிறது. அதற்காக ஆளுநர் பாடாமல் இருப்பாரா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் நொய்யல் ஆறு மீட்பு கருத்தரங்கு கோவை பீளமேட்டில் இன்று (12.01.2023) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கோவை வந்த அன்புமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எங்கள் நோக்கம் நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும். இதில் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நொய்யல் நன்றாக இருந்தால் தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும்; வளம் பெறும். அந்தக் காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் மூவரும் சேர்ந்து நொய்யல் ஆற்றைப் பாதுகாத்தார்கள்” எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அன்புமணி, “தேசியகீதத்தில் திராவிடம் என்று வருகிறது. அதற்காக தேசியகீதத்தை ஆளுநர் பாடாமல் விட்டுவிடுவாரா? சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது மரபு மீறிய செயல்.” எனக் கூறினார்.