Skip to main content

உடன்கட்டை ஏறுதல்; அண்ணாமலைக்கு சீமான் கேள்வி

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

"Does Annamala accept or reject Ambedkar's opinion?" - Seaman

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்தன. இந்த நிலையில், செப்டம்பர் 2-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பாஜக தலைவர் அண்ணாமலை படையெடுப்பின் பிறகு தான் உடன்கட்டை ஏறும் பழக்கம் வந்தது என பேசியிருந்தார். 

 

இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அபோது, அண்ணாமலையின் கருத்து குறித்தும், சாதியை குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், “வரலாற்றை திரித்து உண்மைக்கு புறம்பான இந்த கட்டுக்கதைகளையே நம்பவைத்தவர்கள் இவர்கள். 

 

புராணம், இதிகாசம், இலக்கியம் சுவைப்பட பேசுவதில் பொய்கள் இருக்கும். வரலாறு என்றும் பொய் பேசாது. வெள்ளையர்கள் இங்கு வரும்போதே தீண்டாமை இருந்தது. தோள் சீலை போராட்டம், எச்சிலை தரையில் துப்பாமல் கொட்டாங்குச்சியில் துப்பிய காலம், தெருவில் நடக்கக்கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது, வேட்டியை முட்டிக்கு மேல் கட்ட வேண்டும் என்பதெல்லாம் இருந்தது. 

 

பாதி வெள்ளையாக இருக்கும் பிராமணர் தொட்டால் தீட்டு எனும்போது, முழு வெள்ளையாக இருந்த ஆங்கிலேயர் வந்து தொட்டனர். அதன் காரணமாகவே மக்கள் கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டனர். இது தான் வரலாறு. சனாதன தர்மத்திற்கு எதிராக புரட்சி செய்தவர்கள் பலர். அதில், வள்ளலார் சன்மார்க்கம் என்பதையும், வைகுண்டர் அன்பு மார்க்கம் என்பதையும் தோற்றுவிக்கிறார்கள். வெள்ளையர்கள் வந்து தான் சமத்துவத்தை உருவாக்கினார்கள். 

 

நீங்கள் குலக் கல்வி வைத்து, எங்களை கல்வி கற்க கூடாது என்று வைத்திருந்தீர்கள். வெள்ளையர்கள் வந்துதான் பள்ளிக்கூடங்கள் கட்டி எங்களை படிக்கவைத்தனர். பிறகு அவர்கள் இங்கு சனாதனத்தையும், சாதியும் கொண்டுவந்தார்கள் என்று பேசுவதா.

 

ஒரு தனிமனிதன் 10 ஆயிரம் புத்தகங்கள் படிக்கமுடியும். அம்பேத்கர் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்தவர். அவர், மூன்று ஆயிரம் வருடமாகத் தான் இந்த வர்ணாசிரம கோட்பாடும் சனாதன கோட்பாடும் வந்தது என்கிறார். அதுவும் ஆரியர் வருகைக்கு பிறகு என எழுதியிருக்கிறார். அண்ணாமலையும், ஆளுநர் ஆர்.என். ரவியும் இதனை ஏற்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா? 

 

வெள்ளையர்கள் நாட்டில் நிறவெறி உள்ளது சாதி இருக்கிறதா? எங்களுக்கு இயற்கை வழிபாடு இருக்கிறது; மூத்தோர்கள் தெய்வங்கள். எங்களுக்கு எரிப்பது வழக்கமே கிடையாது. நீங்கள் தீயை வழிபடுபவர்கள்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்