நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்கு பெற்றதாக அதிமுக வேட்பாளர் தேன்மொழியின் மீது புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் சார்பில், அக்கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தேர்தல் உதவி அலுவலர் சுப்பையாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் “நிலக்கோட்டை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான தேன்மொழி, தொகுதியில் உள்ள இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் வாக்காளர்களுக்கும் ரூபாய் 500 வீதம் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மேலும் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டிருக்கிறார். எனவே நிலக்கோட்டை தொகுதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து, தேன்மொழி மீது நீதிமன்ற விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 6ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், திடீரென புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளருக்கு எதிராக தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.