Published on 30/04/2020 | Edited on 30/04/2020
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அனக்காவூர் அடுத்த வெங்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் தி.மு.க. முன்னாள் ஒன்றியக்குழு கவுன்சிலர் செல்வகுமார். தீவிர தி.மு.க. அபிமானியான இவர், சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவ்.
சமீப நாட்களாக திருவண்ணாமலை தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பதிவுசெய்து வந்துள்ளார். இந்நிலையில் செய்யாரில் உள்ள மற்றொரு தி.மு.க. பிரமுகரான கலைஞர் பாஸ்கர் என்பவர் தந்துள்ள கொலைமிரட்டல் புகாரின் கீழ் செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து செல்வகுமாரின் மனைவி பத்மா, சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர், கலெக்டருக்கு அழுதபடி கோரிக்கை விடுத்துள்ள அந்த வீடியோவில், "உட்கட்சி தகராறில் பொய்யான புகாரின்கீழ் எனது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, இதற்கெல்லாம் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், தெற்கு மா.செவு மான எ.வ.வேலு தான் காரணம்' என்றுகூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக. தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதோடு, வீடியோ மூலமாகவும் பத்மா கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபற்றி அந்த பெண்மணியால் குற்றம்சாட்டப்படும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏவிடம் கேட்டபோது, "கட்சிக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்ட பிறகே, தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாஸ்கரிடம் கேட்டேன். நான்தான் புகார் தந்தேன் எனச்சொல்லி என்ன நடந்தது என்பதை விளக்கமாகச் சொன்னார். அதன்பிறகே, இந்த விவகாரம் பற்றி எனக்குத் தெரியும். இதில் என் பெயரை இழுத்துவிட்டால், பரபரப்பு கிடைக்கும் என்பதற்காக அந்தப் பெண்மணியை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்'' என முடித்துக்கொண்டார்.