Skip to main content

ஓ.பி.எஸ். அணி சார்பில் பொதுக்கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

OPS Notification of date for general meeting on behalf of the team
கோப்புப்படம்

 

அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 28 ஆம் தேதி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த ஒருமாத காலமாக மத்திய பாஜக தலைமையில் இருந்து தினந்தோறும் எங்களிடம் தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். தேசிய அளவில் கட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் உள்ளது. பாஜக 2 முறை ஆட்சி செய்திருக்கிறது. 3வது முறையும் ஆட்சி செய்கின்ற தகுதியையும் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக பாஜக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக பாஜக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 11 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் 16 ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்