முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தென்காசி, நாகை, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் எனப் பலரும் திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வர், திமுக தலைவர் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தஞ்சை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான பரசுராமன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்.பி பரசுராமன் பேசியதாவது, “அதிமுகவின் உண்மைத் தன்மை குறைந்து விட்டது. அதிமுக இன்று சிதறி, கிழிந்த சேலை போல ஆகிவிட்டது. இனி அதிமுக விரைவில் இல்லாமல் போய் விடும் என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. அதை எண்ணிக் கொண்டு மக்களுக்காக மக்கள் பணியில் மிகச் சிறப்பாகச் செயலாற்றும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் செயல்படுவதை விரும்பி வந்திருக்கிறோம்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, குற்றச்சாட்டு முழுவதும் உங்களுக்கு தெரிந்து இருக்கும். உங்களுக்கு தெரியாத உண்மை அல்ல. அந்த குற்றச்சாட்டுகளை நீங்களே தெரிந்து கொண்டு அந்த செய்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதனை இந்த நேரத்தில் சொல்லவிரும்புகிறேன். அதே போல் நான் எந்த பதவியும் திமுகவில் கேட்கவில்லை. இணைந்தவர்கள் மக்களுக்காகச் சிறப்பாகச் செயல்படுவார்கள்” எனக் கூறினார்.