சென்னையில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினருக்கு போதைபொருட்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்ற நிலை ஏற்பட்டிருப்பதைப் பற்றியும், இன்று ஆளுகின்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக, அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற, எதிர்த்துப் பேசுகின்றவர்கள் மீது போடப்படுகின்ற பொய்யான வழக்குகள் பற்றியும் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். பொய்யான வழக்குகள் மட்டுமல்லாது, எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் காவல்துறை கைது செய்கிறது. தமிழக காவல்துறை பற்றி சொல்வதற்கே சங்கடமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையான காவல்துறை என பெயரெடுத்த தமிழக காவல்துறை தற்பொழுது திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது. எதிர்த்து கேள்வி கேட்பவர்களை மட்டுமல்லாது, கேள்விகேட்போரின் உறவினர்கள், அவருடன் தொடர்பிலிருந்தவர்களையும் எந்த சட்டவிதிகளையும் பின்பற்றாமல் எல்லோரையும் காவல்துறை மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆள்கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பற்றி ஆளுநரிடம் எடுத்துரைத்தோம்'' என்றார்.