Published on 05/07/2019 | Edited on 05/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது. இதில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பாக கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பாக 2 ராஜ்யசபா சீட்டுக்கான வேட்பாளரை அறிவித்தது. மேலும் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது போல் மதிமுகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா சீட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவித்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நான் குற்றஞ்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில், விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும்,அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசிற்கு எதிராகவும் வைகோ பேசியதாகவும், அவரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி வைகோ மீது அப்போது ஆட்சியிலிருந்த திமுக தேசதுரோக வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளாக விசாரித்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில் வைகோவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் தேச துரோக வழக்கில் வைகோவை குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளதால் அவர் மாநிலங்களவை உறுப்பினருக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.