விருதுநகர் மாவட்டம், பட்டம்புதூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்று, உரையாற்றிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பெயரை உச்சரிக்காமலேயே, ஒரு பிடிபிடித்தார். மேலும் அவர் பேசியதில், “இந்தத் தொகுதியில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். பஃபூன் மந்திரி என்று சொல்வதா? பலூன் மந்திரி என்று சொல்வதா? அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன். பெயரைச் சொல்லும் அளவுக்கு அவர் அவ்வளவு தகுதி படைத்தவர் அல்ல. அமைச்சராக இருக்கிறார். தமிழ்நாட்டில் 1920- ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் நடக்கிறது. அதாவது, கடந்த 100 ஆண்டுகளாக எத்தனையோ தேர்தல்கள் நடந்துள்ளன. இத்தனை தேர்தல்களிலும் வென்றவர்களில் மிக மோசமான அடிமுட்டாள் யார் என்றால், அவர் தான்.
இதைப் போன்ற தலைகுனிவு தமிழகத்துக்கு இதுவரை வரவும் இல்லை. இனி வரவும் கூடாது. அவர் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். என்னை ஒருமையில் பேசுகிறார். அசிங்கமாகப் பேசுகிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தகுதியான ஒருவர் விமர்சித்தால், அதைப் பற்றி கவலைப்படலாம். அதற்கு மதித்து பதில் சொல்லலாம். தரம் கெட்டவர்களிலும், கேடுகெட்ட ஒருவருக்குப் பதில் சொல்வது எனக்கு அவமானம்.
அவர் பெயரைச் சொன்னால் எனக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் இந்த மேடைக்கு இழுக்கு. அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இழுக்கு. அதனால், அவர் பெயரைச் சொல்லவில்லை. இந்தத் தேர்தலில் அவர் படுதோல்வியடைவார். அதுதான் நடக்கப்போகிறது. நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில், அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விரைவில் தீர்ப்பு என்று அறிவித்துள்ளார்கள் நீதிபதிகள்.
நீதிமன்றத் தீர்ப்பு என்னவாக வரப்போகிறது என்று எனக்குத் தெரியாது. மக்கள் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. ஊரை அடித்து உலையில் போட்ட அ.தி.மு.க. அமைச்சர்களை சிறைக்கும்- ஊருக்கு உழைக்கும் தி.மு.க.வை கோட்டைக்கும் அனுப்பும் தேர்தல் தான் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்” என்று அ.தி.மு.க. ஆட்சியையும், குறிப்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியையும் கடுமையாகத் தாக்கினார்.
இந்தப் பரப்புரையின்போது, ‘விருதுநகர் மாவட்ட பிரச்சனைகளை விளக்கும் குறும்படம்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில், ராஜேந்திரபாலாஜியின் சிவகாசி தொகுதியை மட்டுமே குறிவைத்து, அத்தொகுதியில் நிலவும் சுகாதாரக் கேடு, சேதமடைந்த சாலைகள், குடிநீர்த் தட்டுப்பாடு, வாறுகால் வசதி போன்றவை இல்லையென்று, பொதுமக்கள் குற்றம்சாட்டும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மேலும், சிவகாசி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான ரயில்வே மேம்பாலத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதையும், அக்குறும்படம் சுட்டிக்காட்டியது.
தொடர்ந்து தன்னைக் கடுமையாக விமர்சித்துவரும் ராஜேந்திரபாலாஜி மீதான மு.க.ஸ்டாலினின் கோபமும், சிவகாசி தொகுதியில் அவரைத் தோற்கடித்தே ஆகவேண்டும் என்ற தி.மு.க.வினரின் ஆவேசமும், இந்த விருதுநகர் மாவட்ட பரப்புரையில், அப்பட்டமாக வெளிப்பட்டது.