அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
தகுதி நீக்கம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “பிரதமர் மோடி - அதானி இடையேயான தொடர்புகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்பட மாட்டேன். என்னை தகுதி நீக்கம் செய்தாலும், கைது செய்தாலும் உண்மை பேசுவதைத் தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்திருந்தார்.
“ரூ.20 ஆயிரம் கோடி யாருடையது..? மோடி கண்ணில் பயத்தைப் பார்த்தேன்” - ராகுல் ஆவேசம்
இந்நிலையில், ராகுல் தனது அரசு பங்களாவை காலி செய்யச் சொல்லி நாடாளுமன்ற செயலகம் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதற்கு ராகுல் காந்தி, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன் என்று சொல்லி அரசு பங்களாவை காலி செய்வதாக நாடாளுமன்ற செயலருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன்.. - அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல் அறிவிப்பு
இந்த விவகாரங்களுக்கிடையே அமெரிக்கா வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் ராகுல் காந்தி தொடர்பான வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும் நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஜனநாயக மாண்பைப் பேணுவது, கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது போன்றவற்றில் இந்தியா, அமெரிக்கா ஒருமித்த மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மனிதநேயத்தைப் பேணுதல் என்பது இருநாடுகளில் ஜனநாயகக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமூக உறவைப் பேணவே விரும்புகிறது" என்று தெரிவித்தார்.