ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திமுகவின் வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் மருங்காபுரியில் அதிமுக வென்றது போல் ஈரோட்டில் வெல்லும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்பு பேசி இருந்தார். அதற்கு பதில் தரும் விதமாக காசிமுத்து மாணிக்கம் பேசுகையில், "1980 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தோற்றது.1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பர்கூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதாவே திமுகவின் சுகவனத்திடம் தோற்றுப் போனார். பென்னாகரத்தில் இரட்டை இலை சின்னம் டெபாசிட்டை இழந்தது. 2017 ஆம் ஆண்டு சுயேச்சை சின்னத்திடம் ஆளும் கட்சியாக இருந்து இரட்டை இலை சின்னம் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதையும் மறக்க வேண்டாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரண்டு ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். சிலருக்கு நோட்டாவுடன் போட்டி. அதிமுகவுக்கு டெபாசிட்டுடன் போட்டி. மதுரையில் சிலம்போடு கோவலன் கதை முடிந்தது. ஈரோட்டில் இடைத் தேர்தலோடு எடப்பாடி கூட்டத்தின் கதை முடிந்தது என்பதை இந்த தேர்தல் காட்டும்" எனப் பேசினார்.