2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக அந்தக் கட்சியினரே ஒரு சிலர் பணியாற்றி அதிமுகவை வெற்றி பெறச் செய்ய முயற்சி செய்தனர். அந்த வரிசையில் திருச்சி மாவட்ட ஒன்றிய செயலாளராக இருந்த நவல்பட்டு விஜி, கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகவும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் திமுக தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது.
கடந்த தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தோற்கடிக்க, பா.குமாருடன் கைகோர்த்து அவருடன் களத்திற்கு நேரடியாக சென்று வாக்கு சேகரித்து பணியாற்றியுள்ளார். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கொண்டு திராவிட கழகத்திற்கு எதிராகவே பணியாற்றிய இவரது செயல்பாடுகளால் அவரோடு எந்த திமுக தொண்டர்களும் நட்புறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடிய திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணிக்கு, நேற்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி நேரில் சென்று கேக் வெட்டி ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்ததால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மிக காரசாரமான விவாதங்களும் அத்துமீறிய கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகிறது. மேலும், தொண்டர்களிடையே இவரைப் பற்றிய பேச்சு அதிகமாக தற்போது காணப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணியை தொடர்பு கொண்டபோது, "நான் அவரை அழைக்கவில்லை, அவராக வந்தார். அரசியல் நாகரீகம் கருதி நான் அவர் வருகைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார். திமுக தலைமை பிரச்சனை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சனையை தீர்த்தால் நன்றாக இருக்கும்" என்று திருச்சி மாவட்ட திமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.