தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் வரும் 21-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கின்றன. இதுபற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் தி.மு.க. இப்போதே தயாராக தொடங்கி இருப்பது தெரியவருகிறது. இதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (திங்கட் கிழமை) தொடங்குகிறது. இதில் திமுக உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.