அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை செய்ய அதிகாரிகள் சென்றனர். ஆனால், அசோக் வீட்டில் இல்லாமல் வீடு பூட்டியிருந்ததால் அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அசோக்கின் ஆதரவாளர்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட சிலர் மீது நடத்திய தாக்குதலில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கின் நிலை இதுதான். வருமானவரிச் சோதனையோடு நிறுத்தி விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் எத்தனை சோதனை வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எத்தனை சோதனை நடந்தாலும் அதனைத் தாங்கும் வல்லமையை தமிழக முதல்வர் எங்களுக்கு தந்துள்ளார். எத்தனை சோதனை நடந்தாலும் வரும் மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெறும். கரூரில் வருமான வரி சோதனை நடத்த வந்த அதிகாரிகளை பணி செய்ய விடாமல் யாரும் தடுக்கவில்லை. சில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம்'' என்றார்.