Skip to main content

தொடரும் இழுபறி... திமுக கூட்டணி கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை!

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

DMK alliance parties consult separately!

 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று (04.03.2021) விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்தான நிலையில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

 

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கோரியுள்ள நிலையில், 6 இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்க இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

அதேபோல் திமுகவுடன் கூட்டணியில் உள்ள மதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டிலும் இழுபறி நீடித்துவருவதால், சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலளார் வைகோ தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டிருந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 6 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ள நிலையில், திமுக-மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப் பங்கீட்டிலும் இழுபறி நீடிப்பதால் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நாளை மாநில செயற்குழு கூட்டம் இரண்டாம் முறையாக  நடைபெறுகிற இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்