அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா அதிமுகவின் பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதிமுகவில் முக்கிய தலைவராக இடம்பிடித்தவர் அன்வர்ராஜா. அவர் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் எதிரான வகையில் செயல்பட்டதால் அன்வர்ராஜா நீக்கப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நாளை அதிமுக செயற்குழு நடைபெற இருக்கின்ற நிலையில் செயற்குழு கூடுவதற்கு முன்பே அன்வர்ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளரும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான புகழேந்தி, அன்வர்ராஜா நீக்கம் குறித்து நக்கீரன் இணைய தளத்திற்குக் கருத்து தெரிவித்துள்ளது பின்வருமாறு...
''பகலில்தான் அதிமுகவிலிருந்து நல்லவர்களையும், வல்லவர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும், மூத்த நிர்வாகிகளையும் நீக்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது இரவு நேரங்களில் நீக்க ஆரம்பித்துவிட்டார்கள். நிதானத்தோடு இரவு நேரங்களில் சிலர் கொடுத்த உத்தரவின் பேரில் இது நடந்திருக்கலாம். ஆகவே அன்வர்ராஜா நீக்கம் என்பது அதிமுக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்து விட்டது. இது கட்சிக்குப் பெருத்த இழப்பு. எந்த தவறும் செய்யாமல் என்னைப்போல் நியாயமாகப் பேசியதற்குக் கிடைத்த பரிசு. இந்த அதிகார வர்க்கத்தை ஒழிப்போம்'' என்றார்.