மதுரையில் சாலையில் சென்ற காருக்கு வழிவிடாத அரசு பேருந்தின் ஓட்டுநர் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று காளவாசல் பகுதியைக் கடந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த இனோவா கார் ஓட்டுநர் முந்திச் செல்ல வழி விடும்படி தொடர்ந்து ஒலி எழுப்பி உள்ளார். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததால் அரசு பேருந்து ஓட்டுநர் வழிபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் அரசு பேருந்தை வழிமறித்து காரை நிறுத்திவிட்டு கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து பேருந்து கண்ணாடியை உடைத்ததோடு, ஓட்டுநரை ஆபாசமாகத் திட்டி தாக்கினார். இதனால் ஓட்டுநரின் கை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டித்து அடுத்தடுத்து அரசு பேருந்துகளில் வந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பொதுமக்கள் காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் மதுரையிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில் 'காரில் பயணித்தவர்களுக்கு வழி கிடைக்காததால் மதுரையிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியது அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதைக் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வரின் பதில் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருடர்களைத் தனியாகப் பிடிக்கச் சென்ற திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் தற்போது இந்த சம்பவமும் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.