Skip to main content

பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன? தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி?

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

 


காலையில் பட்ஜெட் படிப்பு என்றால் மாலையில் இஸ்லாமியர்களை அடித்து உதைத்துப் பழிதீர்ப்பு! சிஏஏ எதிர்ப்பால் ஒன்றிய பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

எஞ்சிய ஓராண்டும் எப்படியெப்படி கமிஷன் பார்ப்பது என்ற கோணத்தில் ஓர் அதிசயப் பட்ஜெட்டை கோட்டையில் காலையில் படிக்கத் தொடங்கியது என்றால் அதைப் படித்து முடித்த கையோடு மாலையில் இஸ்லாமியர்கள் மீது போலீசை ஏவி வெறியாட்டம் ஆடியது அதிமுக அரசு.

 

 Velmurugan



இஸ்லாமியர்களைக் குறிவைத்து பாசிச குடியுரிமைத் திருத்த சட்டத்தைக் (சிஏஏ) கொண்டுவந்தது பாஜக மோடி அரசு என்றால், அதன் அடிமையாக இருப்பதுடன் அடியாளாகவும் மாறி எஜமான் கட்டளைப்படி இஸ்லாமியர்களைப் பழிதீர்க்கத் தொடங்கியிருக்கிறது அதிமுக பழனிசாமி அரசு.
 

அதனால்தான் நேற்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதல்லாமல் ஒவ்வொருவராகப் பிடித்து அடித்து உதைத்துத் துவம்சமே செய்திருக்கிறது.
 

சிஏஏவுக்கு எதிராக இந்தியா முழுவதுமே கிளர்ந்தெழுந்து போராட்டங்கள் நடைபெற்றுவருவதைப் பார்க்கிறோம். இதில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிஏஏ போராட்டக்காரர்களை குருவிகளைப் போல் சுட்டுத்தள்ளியதையும் கேள்விப்பட்டோம். அப்படியிருக்க, சென்னைக் கோட்டையில் உள்ள அதிமுக அரசு என்ன சும்மாவா இருந்துகொண்டிருக்கிறது என ஒன்றிய பாஜக அரசு நினைப்பதும் வினவுவதும் நமக்குப் புரியாமல் இல்லை. இதற்கான விடைதான் தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் மீது போலீசை ஏவி பாய்ந்து பிராண்டுவதாகும்.
 

சென்னை பழைய வண்ணார்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களுமாக இஸ்லாமியர்கள் திரண்டு நேற்று மாலை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் போக்குவரத்துக்கு இடைஞ்சல், அதனால் போராட்டத்தைக் கைவிடுங்கள், கலைந்து செல்லுங்கள் என்று மிரட்டியது போலீஸ். போராட்டக்காரர்கள் மறுக்கவே வடசென்னை காவல்துறை இணை ஆணையர் தினகரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போராட்டம் தொடர்ந்தபோது போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது ஒவ்வொருவராகப் பிடித்து போலீசார் அடித்து உதைத்ததாகத் தெரியவருகிறது. அத்துடன் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் தெரியவருகிறது.
 

இதற்குக் கண்டனம் தெரிவித்து பெண்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் குழந்தைகள் உள்பட குடும்பமே போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


 

சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி, வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு தொடங்கிய சாலை மறியல் கிண்டி, ஆலந்தூர் போன்ற இடங்களிலும் தொடர்ந்தது.
 

கிண்டி, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் சென்னை விமான நிலையம் செல்ல வேண்டியவர்கள் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும் செங்கல்பட்டு, கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையிலும் போராட்டம் நடந்ததால் அப்பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

அதோடு, போராட்டம் தமிழகமெங்கும் பரவியது. திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, திருச்சி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், பழனி. தேனி, நாகர்கோவில், கன்னியாகுமரி என தமிழகம் முழுவதிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

இதற்கிடையே கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் சார்பிலான இஸ்லாமியப் பிரதிநிதிகளுடன் மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 

சிஏஏவுக்கு எதிராக பல மாநில அரசுகள் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நமக்குப் பக்கத்திலுள்ள புதுச்சேரி மாநில அரசும் சிஏஏ எதிர்ப்புத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஆனால் அண்ணா பெயரிலேயே கட்சியை வைத்துக்கொண்டிருக்கும் அதிமுகவோ பாமகவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு மாநிலங்களவையில் சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்ததால்தான் அந்த சிஏஏ மசோதாவே சட்டமானது. அப்படியிருக்க தன் எஜமானின் கட்டளைப்படி இஸ்லாமியர்களின் இடுப்பை ஒடிக்கின்ற பழிதீர்க்கும் படலத்தில் இறங்குவதல்லாமல் வேறென்ன செய்யும் அதிமுக?
 

அதனால்தான், காலையில் பட்ஜெட் படிப்பு என்றால் மாலையில் இஸ்லாமியர்களை அடித்து உதைத்துப் பழிதீர்ப்பு!
 

சிஏஏ எதிர்ப்பால் ஒன்றிய பாஜக அரசுக்கு ஜுரம் என்றால் அதிமுக அரசுக்கு ஜன்னியே கண்டதென்ன என்று கேள்வி எழுப்பி தனது கண்டனத்தை பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்