Published on 05/07/2019 | Edited on 05/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் கொடுக்கப்பட்டன. போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. இதற்கு தேமுதிக தலைமையிடம் இருந்து தேர்தல் நிதி கொஞ்சம் கூட தரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். தொண்டர்களும் விஜயகாந்த் முன்பு மாதிரி கட்சி பணியில் இல்லை. அவரது குடும்பம் கட்சியை வழி நடத்தும் விதமும் சரியில்லை என்று புலம்பி வருகிறார்கள்.
இதனால் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் மீது இருந்த நம்பிக்கை போய் விட்டது என்கின்றனர். தேர்தல் தோல்வியால் தினகரன் கட்சியிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி திமுக மற்றும் அதிமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். அதே போல் விஜயகாந்த்தின் கட்சியிலிருந்து நிர்வாகிகள் வேறு கட்சிக்கு செல்ல தயாராகி விட்டனர். தேமுதிகவில் இருக்கும் அதிருப்தியாளர்களை இழுக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதால் அக்கட்சியினர் திமுகவிற்கு போக அதிக வாய்ப்புகள் உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.