நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தேமுதிக படு தோல்வி அடைந்தது. தேர்தல் செலவுக்காக கட்சியின் தலைமையில் இருந்து எந்தவிதமான நிதியும் வரவில்லை என்று வேட்பளார்கள் முதல் தொண்டர்கள் வரை அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வங்கியில் இருந்து விஜயகாந்த் வீடு மற்றும் கல்லூரி ஏலத்துக்கு வருவதாக செய்திகள் வந்தன.
இந்த செய்தியை கேள்வி பட்ட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. வங்கியில் வாங்கிய 5 கோடி ரூபாய் கடனுக்காக விஜயகாந்த் சொத்துகள் ஏலம் எப்படி வருகிறது என்று புரியாத புதிராக இருந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா எங்களுக்கு வருமானம் இல்லை அதனால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என்று கூறினார். இதை கேட்ட அனைவருக்கும் வேறு வழியில்லாமல் இருக்கிறார்களா இதை நம்ப முடியவில்லை என்று தெரிவித்தனர். பின்பு அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் நிதி கேட்டதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து கட்சியில் சில நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்ல தயாராகி விட்டதாக கூறுகின்றனர்.
இது பற்றி தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரித்த போது, விஜயகாந்த் என்ற தனி மனிதருக்காக மட்டுமே தேமுதிகவில் இருந்தோம். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கட்சியில் அவரது செயல்பாடு முன்பு போல் இல்லை என்று தேமுதிகவினர் கருதுகின்றனர். மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி விஷயத்தில் பிரேமலதா மற்றும் சுதீஷின் செயல்பாடு அக்கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். அதோடு தேமுதிகவை ஒரு பிசினஸ் கட்சி போல் தேமுதிக தலைமை மாற்றிவிட்டது என்று சொல்கின்றனர். இதனால் விஜயகாந்த்தை தவிர வேறு யாரையும் நாங்க நம்ப தயாராக இல்லை என்று புலம்பி வருகின்றனர். இன்னும் சில நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்ல தயாராகி விட்டனர் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.