பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் வந்து சேர்ந்தார். அப்போது, ஊடகத்தினரிடம் அவர் கூறுகையில்,
''பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசுதான் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசின் நிதி நெருக்கடி காரணமாக, எரிபொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்திட முடியாது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடந்தது என்பதை வைத்து மட்டுமே அவரை குற்றவாளி என்று சொல்லி விட முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் குற்றவாளியாக கருதப்படும்,'' என்றார்.
சிபிஐ சோதனைக்கு மத்திய அரசுதான் காரணம் என தம்பிதுரை கூறியது குறித்து கேட்டதற்கு, ''அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசின் கருத்து அல்ல,'' என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்டபோது, ''தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. அரசுக்கு நிதியுதவி அளிப்பவர்களுக்கு எங்களது ஆதரவு இருக்கும்,'' என்றார்.
அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்த கேள்விக்கு, ''இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதை சகித்துக் கொள்ளாதவர்கள்தான் இந்த அரசு மீது புகார் சொல்கின்றனர். எந்த துறையிலும் ஊழல் நடந்ததாக எங்களுக்கு இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை,'' என்றார்.
மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா இறங்கியுள்ளது குறித்து கேட்டதற்கு, ''தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என்பதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளது. மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் கருத்தாக உள்ளது.
தமிழகத்தில் கடுமையாக வறட்சி ஏற்பட்டபோது குடிநீர் தேவைக்காககூட கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அங்கே மேலும் ஒரு அணை கட்டப்பட்டால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும். இப்பிரச்னையை சட்ட ரீதியாக சந்திப்போம்,'' என்றார் எடப்பாடி பழனிசாமி.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதே என்றதற்கு, ''அது தவறான செய்தி. தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம். அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை,'' என்றார்.
எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.