இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவுற்ற சூழலில் இந்த ஒரு மாதம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ளார். காலையில் ஒரு கூட்டமும் மாலையில் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள முக்கிய அமைச்சர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.
முக்கியமான தலைவர் வரும்போது அதற்கான எச்சரிக்கை எதுவும் இருக்காதா? அதுதான் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. அமித்ஷா சரியாக வெளியில் வரும் போது அந்த மின் தடை ஏற்படுகிறது என சொன்னால் திமுக அரசு இதில் ஏதோ வேலையை செய்ய வாய்ப்பு இருப்பதாக நாங்கள் பார்க்கிறோம். இதற்கு முன் திமுகவின் செயல்பாடுகளை பார்க்கும் போது, பிரதமர் வரும் போது கூட கருப்பு கொடி காட்டுவதும், கருப்பு பலூன் விடுவதும் தான் இவர்கள் வழக்கம்.
இங்கு மறைமுகமாக இருட்டை காண்பிக்கலாம் என நினைத்தார்களா என்று சந்தேகப்படும் முழு உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் அவர்களது கடந்த காலம் அப்படி. அது மட்டுமல்லாமல் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்றுள்ள நபர், அச்சுறுத்தல் இருக்கக்கூடிய நபர் என்பதும் தெரியும். அப்படி இருக்கையில் அவர் வரும்போது அரைமணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது” எனக் கூறினார்.