மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி. ராஜா இன்று அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “டெல்டாவில் பல சிறப்பான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்பான விளைச்சலும் இருக்கிறது. நிச்சயமாக தொழிற்துறையில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்ற டெல்டா மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
தொழில் துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு 3 ஆம் இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்கள் முதலில் கதவை தட்டுவது தமிழகத்தை தான். அப்படிப்பட்ட உள்கட்டமைப்புடன் தமிழ்நாடு இருக்கிறது. தொழில் நிறுவனங்களை இங்கு கொண்டு வர வேண்டுமென்றால் மத்திய அரசுடன் இணக்கமுடன் இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். தொழில் துறையில் வேலை நடக்க வேண்டும் என்றால் அதற்கு எந்த அளவு தேவையோ அந்த அளவிற்கு இருப்போம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர், தொழிற்துறையை எந்த அளவிற்கு விரும்புகிறீர்கள். இந்த துறையை வாங்கியதற்கு காரணம் இருக்கா? எனக் கேட்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், “நான் வாங்குனேனா? முதலமைச்சருக்கு தொழிற்துறை என்பது மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஏற்கனவே இத்துறையில் பணியாற்றியவர் அவர். தென்னரசு சிறப்பாக செயல்பட்டாலும் முதலமைச்சரும் உன்னிப்பாக கவனித்து தொழிற்துறை சார்ந்த நிகழ்ச்சிகளின் மேடைகளில் அவரும் அலங்கரித்துள்ளார். முதலீட்டு நிறுவனங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறார். அதனால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது” எனக் கூறினார்.