தியாகமும் எளிமையுமே பொதுவாழ்வு என அரசியல் இலக்கணமாகத் திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் தோழர் நல்லகண்ணு, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார். 1953-ல் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்களை, சீரமைப்புக் காரணங்களுக்காக உடனடியாக வெளியேற உத்தரவிட்டது அரசு.
இது பொதுத்தளத்தில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், "பொது ஒதுக்கீட்டில் இங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்படும்' என பின்னர் அரசு விளக்கமளித்தது. அரசின் உத்தரவை ஏற்ற நல்லகண்ணு தாமாகவே வீட்டை காலி செய்து வெளியேறினார். அதேசமயம், தனக்கு வீடு இல்லையென்றாலும் பரவாயில்லை. கக்கன் குடும்பத்தினருக்கு வேறு வீடு ஒதுக்கித் தரும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், நல்லகண்ணுவைத் தொடர்புகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மாற்று ஏற்பாடு தொடர்பாக உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதன்படி, சென்னை நந்தனம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் லோட்டஸ் காலனி 3-ஆவது தெருவில், இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட தனி வீடு நல்லகண்ணுவிற்கு ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இந்த வீட்டில் ஆயுள் முழுவதும் நல்லகண்ணு வசிக்கலாம். வாடகை இல்லை.
தனது இரண்டாவது மகளான ஆண்டாளின், கே.கே.நகர் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்துவந்த நல்லகண்ணு, தற்போது தனக்கு ஒதுக்கப்பட்ட புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். “நேர்மை மற்றும் எளிமையான அரசியல் வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறேன். என்னிடம் இரண்டாயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை வைப்பதற்காக, இந்த வீட்டில் தனிஅறை ஒதுக்கியிருக்கிறேன். புத்தகங்கள்தான் என் வாழ்வை நகர்த்த உதவுகின்றன. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் புத்தக வாசிப்பில் ஈடுபடப் போகிறேன்'' என்கிறார் மூத்த தோழர் நல்லகண்ணு.