அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் உள்ளார். அதிமுக தலை இல்லாத கட்சியாகத்தான் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமமுக சுதந்திரமாக இயங்கக் கூடிய இயக்கம். நாங்கள் மற்றவர்களுடன் கூட்டணிக்குத் தான் செல்ல முடியும் என்று சொன்னேன். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுகவை வீழ்த்த வேண்டும் என்று தான் சொன்னேன். இன்று அதிமுக என்பது செயல்படாத கட்சியாக உள்ளது. எனக்குத் தெரிந்த வரை பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் உள்ளார். அதிமுக தலை இல்லாத கட்சியாகத்தான் உள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்களாக தன்னை நினைத்துக் கொண்டவர்கள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அமமுக ஒரு அணிலைப் போல செயல்படும். பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் தமிழகத்தில் அமமுக சிறப்பாகப் பணியாற்றுவோம். தேர்தலில் நாங்கள் பின்னடைவைச் சந்தித்ததால் வருங்காலத்திலும் நாங்கள் பின்னடைவைத் தான் சந்திப்போம் என்று யாரும் நினைத்தால் அது அவர்களது எண்ணம். எங்கள் இயக்கம் சிறப்பாகச் செயல்படுகிறது.
அதிமுகவில் ஒரு மாவட்டத்திற்கு இரு மாவட்ட செயலாளர்கள் செயல்படுகின்றனர். பன்னீர்செல்வம் ஒரு மாவட்ட செயலாளரையும் பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரையும் நியமித்துள்ளனர். ஒரு சிலரின் சுயநலத்தால், அதிகார வெறியால் அவர்கள் பேசுவதெல்லாம் சரிவராது.” எனக் கூறினார்.