Skip to main content

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! மார்க்சிஸ்ட் வரவேற்பு... கே.பாலகிருஷ்ணன் அறிக்கை! 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

k balakrishnan cpim

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. இந்த ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலாக்க வேண்டுமெனவும், அந்தந்த மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு சட்டத்தின்படி இம்மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தன. இதன்படி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதமானம், பட்டியலினத்தோருக்கு 18 சதமானம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 1 சதமானம் என ஆக மொத்தம் 69 சதமான இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டுமெனக் கோரப்பட்டது.

 

மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சிதைக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் முறைப்படியான இட ஒதுக்கீட்டை வழங்கிடாமல் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினம், பழங்குடி மக்களை வஞ்சித்து வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மத்திய அரசின் சார்பிலும், மத்திய மருத்துவக் கவுன்சில் சார்பிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில் இதே அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டிருந்தது. அதாவது, அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது எனவும், அப்படியே வழங்கினாலும் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாகத்தான் வழங்க முடியும் என வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தது. மேலும், இவ்வாறு இட ஒதுக்கீடு வழங்கும் போது, ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50 சதமானத்திற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற எதிர்மறையான வாதங்களையே மத்திய அரசு எடுத்து வைத்திருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி வழக்குத் தொடுத்திருந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் 27 சதமான இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில் “மாநிலங்கள் வழங்கியுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும். இதை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என மத்திய அரசின் வாதத்தை நிராகரித்துள்ளது. மேலும், இந்த அகில இந்திய தொகுப்பு இடங்களில் அந்தந்த மாநிலங்கள் அமலாக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்டையில் இடஒதுக்கீட்டினை நிராகரிப்பதற்கான எந்தச் சட்டவிதிகளும் இல்லை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையை மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கவுன்சில் அதிகாரி ஆகிய மூவர் கொண்ட குழு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத்தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பதோடு, மூன்று மாதம் வரை காத்திராமல், விரைவில் இக்குழு கூடி முடிவெடுப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இக்குழுவில் இடம்பெறவுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கவுன்சில் அதிகாரி ஆகியோர் மீண்டும் மத்திய பா.ஜ.க. அரசின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு நிலையினை மேற்கொள்ளக் கூடாது என வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

 

http://onelink.to/nknapp

 

இவ்வழக்கில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையோடு இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியும் கோரிக்கை வைத்திருக்குமானால் நீதிமன்றம் உடனடியான முடிவினை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் மாறான நிலை எடுத்து, மத்திய பா.ஜ.க. அரசினுடைய குரலை நீதிமன்றத்தில் எதிரொலிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி வாதிட்டதினுடைய விளைவே நீதிமன்றம் உடனடியாக இப்பிரச்சனையில் முடிவெடுப்பதைத் தாமதப்படுத்தியுள்ளதோ என்று கருதத் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்