ஈரோட்டில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். எச்.எம்.எஸ்., சண்முகம், சி.ஐ.டி.யு., ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிறகு இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
"போக்குவரத்து, மின்சாரம், வங்கிகள், இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, ரயில்வே என மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி கெரோனா நிவாரணம் வழங்க வேண்டும்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
வரி வருவாய் செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாத குடும்பங்களுக்கு இந்த கரோனா பொதுமுடக்க காலமான ஆறு மாதத்துக்கும் தலா, ரூபாய் 7,500 வீதம் வழங்க வேண்டும். ஊழியர்களின் அகவிலைப்படி, லீவு சரண்டர் போன்றவைகளை ரத்து செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
அதே போல் இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., – சி.ஐ.டி.யு., – எச்.எம்.எஸ்., – ஐ.என்.டி.யு.சி., – எல்.பி.எப்., உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளார்கள். ஈரோடு மாவட்டத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார்கள்.