முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் கடந்த 23 ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது வரை ஒற்றைத் தலைமை தொடர்பாக விவாதங்கள் அதிமுகவில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆதரவுகளை திரட்டி வருகிறார். அப்படி ஒரு ஆதரவாளர் சந்திப்பில் தொண்டர்களைச் சந்தித்த ஓபிஎஸ்ஸிடம் தொண்டர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அங்கு வந்திருந்த பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நிலையில், மூத்த தொண்டர்களுக்கு ஓபிஎஸ் சால்வை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து இங்கு வந்திருந்த முதியவர் ஒருவர் 'அண்ணன் பொறுமை பொறுமை என்று சொல்லி அத்தனையும் விட்டுக் கொடுத்து விட்டார்; ஆனால் தொண்டர்கள் அத்தனை பேரும் அவரை உள்ளத்தில் வைத்திருக்கிறார்கள்' என ஆவேசமாக மனக்குமுறலை வெளிப்படுத்தினார். உடனே அருகிலிருந்த நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர்.