சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மோடி வரவில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது மோடி வரவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மோடி வரவில்லை. நீட் தேர்வால் எங்களின் கிராமப்புற மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்று போராடியபோது மோடி வரவில்லை. ஆனால் தேர்தல் வருகிறது என்றதும் ஓடி வருகிறார்.
சென்னை பொதுக்கூட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கிறார் மோடி. நான்கரை வருடமாக ஏன் இதனை அறிவிக்கவில்லை. எதற்கெடுத்தாலும் தமிழக மக்களை போராட வேண்டிய நிலைக்கு தள்ளியது யார்? மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும்தான்.
ஜெயலலிதா பெங்களூரு சிறைக்கு சென்றபோது, முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்கிறார். மற்ற அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். ஜெயலலிதா பதவியேற்பை டிவியில் பார்ப்பார்கள் என்று அனைவரும் அழுதுக்கொண்டே பதவியேற்றார்கள். இந்த மாதிரி யாரும் பதவியேற்றிருக்க மாட்டார்கள். ஜெயலலிதா உயிரிழந்தபோது எந்த மந்திரியாவது அழுதார்களா? அவர்களுக்கு தேவை ஜெயலலிதாவால் பணம், பதவி. இரண்டு வருடம் கழித்து ஜெயலலிதாவுக்கு சிலை வைத்தார்கள். அந்த சிலையும் ஜெயலலிதாபோல் இல்லை என்று மாற்றினார்கள்.
போன வருஷம் பொங்கலுக்கு 100 ரூபாய் கொடுத்தார்கள். இந்த வருடம் திடீரென ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். திடீரென மக்கள் மீது ஏன் பாசம். அது யார் பணம். மக்கள் பணம். பால் வாங்கும்போது, பஸ் டிக்கெட் வாங்கும்போது, வத்திப்பெட்டி வாங்கும்போது நாம் கொடுக்கிற வரிப்பணம்தான் அது. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை எடுத்து மக்களுக்கு கொடுக்கிறார்கள்.
உலகத்திலேயே எங்கும் நடக்காத அநியாயம் தமிழ்நாட்டில் நடக்கிறது. திடீரென இரண்டாயிரம் நிதி உதவி அளிப்பதாக கூறி, தற்போது கொடுத்து வருகிறார்கள். தேர்தல் என்றால் என்னென்ன வேலை பார்க்கிறார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். உங்கப் பணம் அதனை வாங்கிக்கொள்ளுங்கள். அதற்காக இரக்கப்பட்றாதீங்கம்மா... இரண்டாயிரம் கொடுத்தாங்க நல்லவங்கன்னு காலவாறிவிட்றாதீங்கம்மா... இத்தனை நாளா மக்களை கண்டுகொள்ளாதவர்கள். திடீரென தேர்தலுக்காக பொங்கலுக்கு ஆயிரம், சிறப்பு நிதி இரண்டாயிரம் என அறிவிக்கிறர்கள். இவ்வாறு பேசினார்.