அண்மையில் அதிமுகவின் 'பொன்விழா எழுச்சி மாநாடு' மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுகவின் தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 04.09.2023 (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம், தேதி மாற்றப்பட்டு 10.09.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக் குழுவினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கொடநாடு விவகாரம், அண்ணாமலையின் பாத யாத்திரை, இந்தியா கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.