கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ சீனிவாசன் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், அன்னபூர்ணா உணவக உரிமையாளருமான சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கையுடன் பல கேள்விகளை முன்வைத்தார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசியதோடு எம்.எல்.ஏ தன் உணவகத்திற்கு வந்து ஜிலேபி சாப்பிட்டு விட்டு சண்டை போடுவது குறித்தும் ஹோட்டல் சங்க நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, இது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக உணவக உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.கவின் கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘அதிகார மமதையில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு! மத்திய நிதி அமைச்சர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார். அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்! அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!
கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்! இனி எந்த காலத்திலும், தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பா.ஜ.க-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்! இந்த செயலால் இன்னுமொரு நூறாண்டு ஆனாலும் பா.ஜ.க இதற்காக வருந்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.