திருவாரூர் அ.ம.மு.க. சட்டமன்ற வேட்பாளர் எஸ்.காமராஜின் வேட்புமனுவை நிராகரிக்ககோரி சுயேச்சை வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் 18 சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அவருக்கு பரிசுபெட்டகம் சின்னம் வழங்கப்பட்டது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அ.ம.மு.க. வேட்பாளர் வாகனத்திலிருந்து 285 பரிசுபெட்டகமும் பரிசுபொருளாக குங்கமசிமிழும் கைப்பற்றப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அ.ம.மு.க. வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் சட்டமன்ற சுயேச்சை வேட்பாளர் பி.காமராஜ் அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வாக்குகளைப் பெறும்விதமாக பரிசுபொருள் கொடுக்க முயன்றுள்ளார். இது வேட்பாளர்கள் மத்தியில் சமநிலை இல்லாத போக்கு செயல்படுகிறது. எனவே அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் வேட்பு மனுவை நிராகரிக்கப்பட வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸிடம் மனு கொடுத்தார்.
இதுகுறித்து அ.ம.மு.கவினரிடம் விசாரிக்கையில், ஏற்கனவே நாகை நாடளுமன்ற அ.ம.மு.க. வேட்பாளர் செங்கொடியின் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருக்கும்போது ஊழல் செய்தார் என்று அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் மனுகொடுத்திருந்தார்.
அதற்கு பின்னால் அமைச்சர் காமராஜின் கைவரிசை இருப்பது அப்பட்டமாகவே தெரிந்தது. இந்த நிலையில் சட்டமன்ற வேட்பாளர் எஸ்,காமராஜின் வாக்குகளை சிதைக்க காமராஜ் என்பவரை சுயேச்சையாக நிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டார் அமைச்சர் காமராஜ். தற்போது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என புகார் கொடுக்கவும் செய்துள்ளார் என்கிறார்கள்.